cropped-ko.jpg
WhatsApp Image 2024-08-12 at 11.06.19 PM

 

ஆசீவகம்

ஆசீவகம்

ஆசு – பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென.

ஈவு – தீர்வு

அகம் – தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.

போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.

போதித்தலில் சத்துவ குணமுடையவர் அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்பமாதங்கர் (காச்யப மாதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. இவை பற்றிப் பின்னூற்களில் பேசுவோம். தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர் ) வழங்க பெற்றனர்.

இவ்வாறு பல்வேறு பிரிவினராக ஆசீவகத்தினர் பெயர் பெற்றுத் தமக்குள் பிணக்குற்றுக காலந்தோறும் மாற்றம் பெற்ற ஒழுகியல் கூறுபாடுகளைப் பின்பற்றத் துவங்கினர். காலம் என்பது சமயம் (வேளை) எனும் திசைச் சொல்லாலும் குறிக்கபெற்றது. (ஒரு வேளை என்பது ஒரு சமயம் என்பது போல்) காலத்தால் ஏற்பட்ட ஒழுகியல் மாற்றம் சமயம் எனும் பாகுபாட்டுப் பிணக்கினைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டு பொதுவியலில் பல்வேறு எதிர்மறைக் கருத்துகளையும் குழுக்கள் பிரிதலையும் ஏற்படுத்தியது. இதன் பின்னரே சமயங்கள் எனும் தோல் முட்டைகள் மதங்கள் எனும் வலிய ஓடுகளைத் தம்மீது போர்த்திக் கொண்டன. பல்வேறு காலங்களிலும் பிணக்குகள் பரிணாமம் பெற்றன.

பருத்துயர்ந்த ஒரு மரம் பிளக்கப்பட்டுப் பல்வேறு பொருட்களாக மாறுவது போல் (நாற்காலி, கட்டில் போன்று) ஆசீவக மரபு தனது பொதுமையையும், தன்னையுமிழந்து பல்வேறு குழுக்களாகச் சிதறியது. மரம் என்ற பொதுமை, நாற்காலி, கட்டில் என வேற்றுமைப் பட்டது போல் குழுக்கள் சமயங்களாக உருமாறின. அப்பருத்த மரத்தினை வெட்ட உதவிய கோடரிக்கு அம்மரத்தின் கிளையே காம்பாகவும், கொடுவாளுக்குப் பிடியாகவும் இருந்து உதவியது போல் ஆசீவக மரபிலிருந்து பிரிந்த குழுக்களே ஆசீவகத்தின் முகவரியை இல்லாமற் செய்து தாமே பன்னெடுங்காலமாய் இருந்த தனிப்பெரும் பொதுமை போன்றதோர் மாயையை ஏற்படுத்தின. இவ்வாறு தன்னை யிழந்து தமது தொடரிகளாகப் பல்வேறு குழுக்களுக்கு வளர்சிதை மாற்றத்துக்கு உதவிய ஆசீவக மரபின் அழிக்க முடியாத பண்பாட்டுச் சின்னங்கள் இன்னமும் அழிக்க இயலாச் சிறப்பு நிலையில் குமுகத்தில் விரவிக் கிடப்பதனைச் சுட்டிக் காட்டி எமது மனக் கிடக்கையில் உள்ள பேரவாவினைச் சமன் படுத்து முகத்தான் இச்சிறு நூலினை யாம் யாத்தளிக்கிறோம்.ஆதரவாளர்களுக்கு நன்றி. கருத்தில் மாறுபாடு கொண்டோருக்கு விடையிறுக்கும் பொறுப்பும் எமக்கிருப்பதால் பிணக்குகளைத் தெரிவிக்கலாம் எனத் தங்கள் மறுப்புக்களை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

அறிவர் ஆதி. சங்கரன்

கோரக்கர் அறிவர் பள்ளி,
மூலை ஆற்றங்கரை, வேளிய நல்லூர்
சேயாறு வட்டம்.